குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



குடிவரவு, குடியகல்வு மற்றும் பிரசாவுரிமை பற்றிய வரலாறு

சுதந்திரத்திற்கு முற்பட்ட கால குடிவரவும் குடியகல்வும்

(அக்காலத்தில் சிலோன் என அழைக்கப்பட்ட) இலங்கைக்குள் பிரவேசித்தல் மற்றும் இலங்கையில் இருந்து வெளியேறுதல் பின்வரும் கட்டளைச் சட்டங்களாலேயே கட்டுப்படுத்தப்பட்டது:

  • 1847 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க இந்தியர்களை இலங்கையிலிருந்து குடியகற்றுதல் பற்றிய கட்டளைச்சட்டம்
  • 1874 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு ஆட்சேர்ப்புக் கட்டளைச் சட்டம்
  • 1882 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க இலங்கை குடியகல்வோர் கட்டளைச் சட்டம்
  • 1907 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க ஆதரவற்ற குடிவருவோர் கட்டளைச் சட்டம்
  • 1917 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க குடியகல்வுக் கட்டளைச் சட்டம்
  • 1923 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கடவுச்சீட்டுக் கட்டளைச் சட்டம்
  • 1935 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வெளிநாட்டவர்களைப் பதிவுசெய்யும் கட்டளைச் சட்டம்.
  • 1939 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இந்திய குற்றவியல் குலமரபுக் குடிகளின் குடிவரவுக் கட்டளைச் சட்டம்

 

இந்தியாவின் அல்லது இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் அமைந்துள்ள பிரித்தானிய அல்லது வெளிநாட்டுக் குடியேற்ற நாடொன்றில் தொழிலாளிகளாக பணிக்கமர்த்தும் பொருட்டும் தொழிலாளிகளை பணிக்கமர்த்துவதற்காக அத்தகைய எந்தவொரு குடியேற்ற நாட்டுக்கும் இலங்கையில் இருந்து ஆட்கள் குடியகற்றப்படுவதை தடுப்பதற்காகவும் 1847 ஆம் ஆண்டில் இந்தியர்களை இலங்கையிலிருந்து குடியகற்றுவதற்கான கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சேவைக்காக இலங்கையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக 1874 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு ஆட்சேர்ப்புக் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டது. இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் அமைந்துள்ள வெளிநாடுகளில் சேவையாற்றும் பொருட்டு ஆட்சேர்ப்பு செய்தவை தடை செய்தல் அல்லது ஏதேனும் நிபந்தனைகளினடிப்படையில் அவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதை கட்டுப்படுப்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்குஇக்கட்டளைச் சட்டத்தின் மூலம்வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர்களை சேவை ஒப்பந்தங்களின் கீழ் இலங்கையில் இருந்து குடியகற்றப்படுவதை கட்டுப்படுத்துவதற்காக 1882 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க இலங்கை குடியகல்வுக் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டது. இலங்கைத் தொழிலாளருக்கு குடியகல்வதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய இடங்களைப் பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அத்தகைய ஒப்பந்த உடன்படிக்கை நீதவான் ஒருவரது முன்னிலையில் கைச்சாத்திடப்படல் வேண்டுமெனும் நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஆதரவற்றவர்களும், கயவர்களும் சட்ட விரோதமாக இலங்கைக்கு குடிவருவதைத் தடுப்பதற்காக 1907 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க ஆதரவற்ற குடியகல்வோர் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டது. திறைசேரிக்கு தொந்தரவாக அமையக்கூடிய ஆட்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுப்பதே இச்சட்டத்தின் பிரதான குறிக்கோளாக அமைந்தது. உடல் மற்றும் உள நோய் காரணமாக இலங்கையர் ஒருவர் அல்லது பிரித்தானிய இந்திய தேசத்தவர் அல்லாத ஒருவர் உடல்/உள நோய் நிலை காரணமாக தனது உழைப்பின் மூலமாக பராமரித்துக்கொள்ள இயலாத நிலையில் அத்தகைய ஒருவருக்கு மற்றும் ஆதரவற்ற ஒருவருக்கு தரையிறங்க இச்சட்டத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருப்பது அத்தகைய ஆதரவற்ற குடிவருபவர் தொடர்பில் ஏற்படக் கூடிய ஏதேனும் செலவினம் அல்லது கட்டணத்தை நிதிச் செயலாளரிடம் செலுத்துவதாக இந்நாட்டவர் ஒருவர் கையொப்பமிட்ட முறியொன்று மூலமாக மாத்திரமே அத்தகைய ஆளொருவருக்கு உட்பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும். எவரேனும் விபச்சாரி அல்லது விபசாரத் தொழில் புரிந்து வசிக்கும் ஆளொருவருக்கு இலங்கைக்குள் உட்பிரவேசிக்கவும் இச்சட்டத்தில் தடை விதிக்கப்பட்டது.

நாட்டுக்கு வெளியில் பல்வேறு பதவிகளின் சேவையில் ஈடுபடும் பொருட்டு இலங்கையிலிருந்து ஆட்கள் குடியகல்வதைக் கட்டுப்படுத்துவதற்காக 1917 ஆம் ஆண்டு இல 22  குடியகல்வு கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தில் குடியகல்பவர் என்பதற்கான பொருள் விளக்கத்தில் இலங்கையில் வதிகின்ற சுதேசி எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய குடியகல்பவருக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதைக் கட்டுப்படுத்துகின்ற பிரித்தானிய இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஏதேனும் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள ஆளொருவர் தவிர்ந்த இந்திய சுதேசி ஆவார். குடியகல்பவர் மற்றும் இந்திய குடியகல்பவர் ஆகிய இரு பிரிவினரும் நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்காக பிரதம செயலாளரது எழுத்துமூல அனுமதியைப் பெறவேண்டுமெனும் ஏற்பாடு இச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. வயது 17 வருடங்களுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே இவ்வேற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுங்க அறவீட்டாளர் ஒருவரிடமிருந்து அனுமதி ஒன்றைப் பெற்று அரசாங்கத்துடன் முறியொன்றை கைச்சாத்திட வேண்டுமென இவர்களுக்கு விதிக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் சுங்க அறவீட்டாளரிடம் முன்னூறு ரூபா பணத்தை வைப்புச் செய்ய வேண்டியதாகவும் இருந்தது. தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தமது தொழில்தருநருடன் சேவை ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட வேண்டி இருந்ததோடு அதனைச் சுங்க அறவீட்டாளரினால் அத்தாட்சிப்படுத்தவும் வேண்டி இருந்தது. அதற்கு மேலதிகமாக கப்பற் தலைவர்களின் பொறுப்புக்கள், சோதனையிடல் மற்றும் கைது செய்தல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கொண்டுள்ள பொறுப்புக்கள், துறைமுகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தண்டனை வழங்கல் தொடர்பான ஏற்பாடுகள் சிலவும் அடங்கியிருந்தன.

இலங்கையில் உட்பிரவேசிக்கின்ற அல்லது இலங்கையைவிட்டு வெளியேறுகின்ற ஆட்கள் கடவுச்சீட்டு பெற வேண்டுமென விதிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்வதற்காக 1923 ஆம் ஆண்டு இல 20  வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டது. இலங்கையில் உட்பிரவேசிக்கின்ற அல்லது இலங்கையைவிட்டு வெளியேறுகின்ற ஆட்களிடம் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளும் அதனோடு தொடர்புடைய ஏனையவையும் இருக்க வேண்டுமென பணிக்கின்ற ஒழுங்குவிதிகளை விதிக்கும் அதிகாரங்கள் ஆளுநருக்கு வழங்கப்பட்டன. அதைப் போன்றே எந்தவோர் ஆளையும் அல்லது ஆட்கள் குழுவையும் மேற்படி ஒழுங்கு விதிகளின் எந்தவோர் ஏற்பாட்டிலிருந்தும் விலக்களிக்கும் அதிகாரமும் அவரிடம் கையளிக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகள், 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட புதிய குடிவரவு, குடியகல்வு ஒழுங்குவிதிகள் அமுலுக்குவரத் தொடங்கும் வரை, 1949 ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை வலுவில் இருந்தன.

இலங்கையில் இருக்கின்ற (பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட ஆளொருவரோ பிரித்தானியாவினால் பாதுகாக்கப்பட்ட ஆளொருவரோ அல்லாத பிற) வெளிநாட்டவர்களைப் பதிவு செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு 1935  இல 30 இன்வெளிநாட்டவர்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆளுநரால் வெளிநாட்டவர்களைப் பதிவு செய்யும் அதிகாரி நியமிக்கப்பட்டார். தீவில் ஒரு மாத காலத்திற்கோ அதற்கு மேலாகவோ தங்கியிருக்கக் கருதுகின்ற எந்தவொரு வெளிநாட்டவரும் பதிவு செய்யும் அதிகாரியிடம் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டி நேரிட்டது. மேலும் தீவுக்குள் பயணஞ் செய்வதை மட்டுப்படுத்தல், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், அறிக்கைகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளல் போன்றவை தொடர்பான ஏற்பாடுகளும் அதில் காணப்பட்டன. எனவே இது நிகழ்கால வீசா அனுமதிப் பத்திரத்தைப் பெரிதும் ஒத்திருந்தது.

1939 ஆம் ஆண்டின் இந்திய குற்றவியல் குலமரபுக் குடிகளின் குடிவரவுக் கட்டளைச் சட்டம்.

இந்திய குற்றவியல் குலமரபுக் குடிகள் இலங்கைக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் முகமாக அரசப் பேரவையினால் 1939 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இந்திய குற்றவியல் குலமரபுக் குடிகளின் குடிவரவுக் கட்டளைச் சட்டம்  விதிக்கப்பட்டு 1939.05.23 ஆம் திகதி பேரரசரால் அனுமதிக்கப்பட்டது. இக்காலப் பிரிவில் சில குற்றவியல் இந்திய குலமரபுக் குடிகள் கூட்டாக இணைந்து  இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.பொதுவாக “தக்” என அழைக்கப்பட்ட இவர்கள் அக்காலத்தில் இந்தியாவில் அமுலில் இருந்த சட்டத்திற்கு அமைய குற்றவியல் குலமரபுகள் என அழைக்கப்பட்டனர். இந்தக் கட்டளைச் சட்டத்தின் மூலம் அவ்வாறான குற்றவியல் குலமரபுகள் என வர்த்தமான அறிவித்தலில் பிரசுரிப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அனுமதிப் பத்திரம் இன்றி அவ்வாறான குலமரபுக் குடிகள் இலங்கைக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டது.  இந்தக் கட்டளைச் சட்டத்தின் மூலம் அவ்வாறான ஆட்களை நாட்டிலிருந்து  வெளியேற்றல்,கைதுசெய்தல்,  உடந்தையாக இருப்பதற்கான தண்டனைகள் மற்றும் அவ்வாறான ஆட்களின் கைவிரல் அடையாளங்களைப் பெற்றுக்கொள்ளல் போன்ற ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.  இந்த மட்டுப்பாடுகளுக்கு ஏற்புடையதாக கட்டளை விதிக்கும் அதிகாரம்  பிரதம செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்தது. 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கமுடைய குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தினால் இந்தக் கட்டளைச் சட்டம் நீக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம்

பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் அப்போது நிலவிய பாராளுமன்றம் 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தை வெளியிட்டது. இது 1948 ஒக்டோபர் 6 ஆம் திகதி சான்றுரைக்கப்பட்டு 1949 நவம்பர் 1* ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வந்தது. 2* இலங்கையரல்லாதோர் உட்பிரவேசித்து தங்கி இருப்பதைக் கட்டுப்படுத்தவும் இலங்கைப் பிரசைகளும் பிரசைகள் அல்லாத ஆட்களும் இலங்கையில் இருந்து வெளியேறிச் செல்வதைக் கட்டுப்படுத்தவும் இச்சட்டத்தின் கீழ் தவறு புரிந்துள்ள ஆட்கள் அல்லது ஒழுக்கமற்றோரை நாட்டிலிருந்து வெளியேற்றவும் நாடு கடத்தவும் இலங்கையில் இருக்கும் காலப் பகுதியில் இலங்கையரல்லாத ஆட்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யவும்மேற் குறிப்பிட்ட குறிக்கோள்களுடனும் அதனோடு தொடர்புபட்டதும் இடைநேர்விளைவுடையதுமான விடயங்களை அமுலாக்கவும் நிர்வாக நிறுவகமொன்றை ஒழுங்கமைக்கவும் அவசியமான ஏற்பாடுகள் இச்சட்டம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டன. இச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 1949 ஒக்டோபர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 10039 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. 3*

1847 இல 03 எனும் இந்தியர்களை இலங்கையிலிருந்து குடியகற்றும் கட்டளைச் சட்டம். வெளிநாட்டு ஆட்சேர்ப்புக் கட்டளைச் சட்டம், இந்திய குற்றவியல் குலமரபுக் குடிகளின் குடிவரவுக் கட்டளைச் சட்டம் , ஆதரவற்ற குடிவருவோர் கட்டளைச் சட்டம், குடியகல்வுக் கட்டளைச் சட்டம், கடவுச்சீட்டுக் கட்டளைச் சட்டம், வெளிநாட்டவர்களைப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டம், இலங்கைக் குடியகல்வோர் கட்டளைச் சட்டம் போன்றவை இச்சட்டம் மூலமாக நீக்கப்பட்டன. 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கமுடைய குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம்  பல்வேறு சந்தர்ப்பங்களில் முறையே 1955 இன் இலக்கம் 16, 1961 இன் இலக்கம் 68, 1993 இன் இலக்கம் 16, 1998 இன் இலக்கம் 42 மற்றும் 2006 இன் இலக்கம் 31  மற்றும் 2015 இல 07 ஆகிய திருத்தச் சட்டங்கள் மூலமாக திருத்தியமைக்கப்பட்டது.

இத்திருத்தங்கள் மூலமாக செய்யப்பட்ட தனித்துவமான மாற்றங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1955 இன் 16 ஆம் இலக்க திருத்தச் சட்டம் மூலமாக முதன்மைச் சட்டத்தில் இருந்த நிரந்தர மற்றும் தற்காலிக வதிவாளர்களின் அனுமதிப் பத்திரம் பற்றிய ஏற்பாடுகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வதிவிட வீசா பற்றிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

1961 இன் 68 ஆம் இலக்க திருத்தச் சட்டம் மூலமாக குடிவருவோர் – குடியகல்வோர் சட்டத்தின் கீழான தத்துவங்களையும் கடமைளையும் அமுலாக்குதல் மற்றும் ஈடேற்றுவதை படையின் எந்தவோர் அங்கத்தவருக்கும் வழங்கப்பட்டிருந்த அதிகாரம் ஆளுநருக்கு  வழங்கப்பட்டது. நாட்டுக்குள் சட்டவிரோத குடிவரவாளர் உட்பிரவேசிப்பதைத் தடுப்பதே இத்திருத்தத்தின் நோக்கமாக அமைந்தது.

1972 இல் இலங்கை குடியரசாக மாறியது. நாட்டின் பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என மாற்றப்பட்டது. அதன் பின்னர் குடிவருவோர் – குடியகல்வோர் சட்டம் முறையே 1993, 1998, 2006 மற்றும் 2015 ஆகிய நான்கு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டது. இத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையிலிருந்து சட்டவிரோத குடியகல்வோர் வெளியேறுதலும் மாத்திரமன்றி இலங்கைக்குள் சட்டவிரோத குடிவருவோர் தங்கி இருத்தலை மட்டுப்படுத்தல் தொடர்பாகவும் கவனஞ் செலுத்தப்பட்டது.

அதற்கு மேலதிகமாக இது சம்பந்தமாக கீழே குறிப்பிட்ட சட்டங்கள் தனித்துவமான கருமங்களுக்காக விதிக்கப்பட்டன.

2015 இல 07 எனும் சட்டத்திற்கான திருத்தத்தின் மூலம் கடவுச்சீட்டு ஒன்றை வழங்குவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ விண்ணப்பிக்கும்  ஆளொருவரின் கடவுச்சீட்டில்

உள்ளடக்குவதற்காக கைவிரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்கான அதிகாரம் கடவுச்சீட்டை வழங்கும் அல்லது புதுப்பிக்கும் அதிகாரசபையிடம் வழங்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக இதனுடன் தொடர்புடைய பின்வரும் சட்டங்கள் இங்கு கீழே குறிப்பிடப்படும் விசேட பணிகளுக்காக விதிக்கப்பட்டன.

இலங்கைப் பிரசைகளல்லாத எவரேனும் ஆட்கள் இலங்கையில் தங்கி இருத்தல் சம்பந்தமாக கணிக்கப்பட்ட வரியொன்றை விதித்து அறவிட 1971 இன் 15 ஆம் இலக்கமுடைய தற்காலிக வதிவு பற்றிய வரிச் சட்டம் விதிக்கப்பட்டது.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டு விநியோகித்தல் மற்றும் புதுப்பித்தலை ஒழுங்குபடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்காகவும் இலங்கைப் பிரசைகள் நாட்டிலிருந்து வெளியேறும் அனுமதிப் பத்திரத்தை விநியோகிப்பதற்காகவும் வெளிநாடுகளில் வேலையில் ஈடுபட்டுள்ள இலங்கைப் பிரசைகள் வெளிநாட்டுப் பணத்தில் பெறுகின்ற தமது ஈட்டல்களின் பகுதியொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டியதை ஒரு கடப்பாடாக விதிக்கவும் 1971 இன் 53 ஆம் இலக்கமுடைய வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளியேறல் அனுமதிப் பத்திரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஒரு சில வகுதிகளைச் சேர்ந்த வதிவிட வீசா அனுமதிப்பத்திர தாரர்கள் ஒரு சில வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட 1979 இன் 06 ஆம் இலக்க வதியும் விருந்தினர் (வரிவிலக்களித்தல்) சட்டம் கொண்டுவரப்பட்டது. வதியும் விருந்தினருக்கு மேற்படி சட்டம் மூலமாக வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்

குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் பற்றிய சட்டத்தின் ஏற்பாடுகளை அமுலாக்க புதிய திணைக்களமொன்றை தாபிக்க வேண்டிய அவசியம் மேலோங்கியது. இப்புதிய திணைக்களம் 1949 ஒக்டோபர் மாதத்தில் நிறுவப்பட்ட பின்னர் கொழும்பு கோட்டையில் பணிகள் அரம்பிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் உள்ளிட்ட அவரது பணியணியினர் புதிய திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் வெளிக்களக் கடமைகளை நிறைவேற்றிய பொலிஸ் திணைக்களத்தினால் அப்பணிகளைப் புதிதாக நிறுவிய திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. புதிய சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண வேலைத் திட்டங்கள் அமுலாக்கப்படும் வரை புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தலானது 1949 நவம்பர் 01 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இலங்கைப் பிரசைகளுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணி 1949.11.01 ஆந் திகதி முதல் நிறுத்தப்பட்டது. அன்று தொடக்கம் புதிய இலங்கை கடவுச்சீட்டு பாவனைக்கு வந்ததோடு, அக்கடவுச்சீட்டினை வைத்திருப்பவர் இலங்கைப் பிரசையாதல் அவசியமானது.

பிரசாவுரிமைச் சட்டம்

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப் பகுதி

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் (பிறிதோர் இராச்சியத்தில் அன்றி) பிரித்தானிய முடிக்குரிய டொமினியன் மற்றும் நேச நாடுகளில் பிறந்த ஒவ்வோர் ஆளும் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டவராக விளங்கினார். அதன் காரணமாக இந்நாட்டில் பிறந்த இலங்கையர்கள்கூட பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டவர்களாகவே கருதப்பட்டனர். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் விதிக்கப்பட்ட ஒரு சில சட்டங்களில் அவர்கள் சுதேசிகள் என்றே குறிப்பிட்டிருந்தனர். இன்றேல் இலங்கைக் குடிகள் எனக் குறிப்பிட்டிருந்தனர். அதே நேரத்தில் அச்சட்டத்திலேயே இந்தியர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லது பிரித்தானிய இந்தியாவில் பிறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

1890 இன் 21 ஆம் இலக்க குடிமக்களாக்கல் கட்டளைச் சட்டம்

அக்காலகட்டத்தில் குடியுரிமைச் சட்டமொன்று அமுலில் இருக்கவில்லை. எனினும் வெளிநாட்டவர்களைக் குடிமக்களாக்கும் ஏற்பாடுகளை உள்ளடக்கிய 1890 இன் 21 ஆம் இலக்க குடிமக்களாக்கல் கட்டளைச் சட்டம் அமுலில் இருந்தது. இலங்கையில் உண்மையிலேயே குடியமர்ந்திருந்த எந்தவொரு வெளிநாட்டவருக்கும் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டவருக்கு உரித்தான உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் ஆளுநரிடம் கோரக்கூடியதாக இருந்தது. இச்சட்டம் 1948 இன் 18 ஆம் இலக்க குடியுரிமைச் சட்டம் மூலமாக செல்லுபடியற்றதாக்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலம்

1948 இன் 18 ஆம் இலக்க பிரசாவுரிமைச் சட்டம்

இலங்கைப் பிரசாவுரிமையை ஏற்படுத்துவதற்காகவும் அதனோடு தொடர்புடைய ஏனைய விடயங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு (சட்டத்தினால் பணிக்கப்பட்ட திகதியாக அமைந்த) 1948 நவம்பர் 15 ஆம் திகதியில் இருந்து அமுலாக்கப்பட்டது. ஆளொருவர் இரண்டு வழிமுறைகளில் ஒரு வழிமுறை மூலமாக பெற்றுக்கொள்ளக்கூடிய 'இலங்கைப் பிரசை அந்தஸ்து' என அழைக்கப்பட்ட அந்தஸ்து உருவாக்கப்பட்டது. இவ்விரு வழிமுறைகளாவன சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளவாறான பரம்பரை வழியாக பிரசாவுரிமையைப் பெறல் மற்றும் இச்சட்டத்தில் அல்லது வேறேதேனும் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளவாறு அத்தகைய அந்தஸ்தினைப் பதிவு செய்தல் மூலமாகப் பெற்றுக்கொள்ள அதிகாரம் அளித்தல் ஆகும்.

இச்சட்டம் மூலமாக தொடக்கத்தில் பரம்பரை வழியாக பிரசாவுரிமை பெறல், பதிவு செய்தல் மூலமாகப் பிரசாவுரிமை பெறல் மற்றும் பிரசாவுரிமையை இல்லாதொழித்தல் சம்பந்தமாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் அச்சட்டம் 1950 இன் இலக்கம் 40, 1955 இன் இலக்கம் 13, 1987 இன் இலக்கம் 45, 1993 இன் இலக்கம் 15, 1993 இன் இலக்கம் 43 மற்றும் 2003 இன் இலக்கம் 16 ஆகிய திருத்தச் சட்டங்கள் மூலமாக திருத்தப்பட்டன. இத்திருத்தங்கள் மூலமாக செய்யப்பட்ட முக்கியமான திருத்தங்கள் பின்வருமாறு.

1950 இன் 40 ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் மூலமாக பிரசாவுரிமையை மீண்டும் வழங்குதல் மற்றும் இரட்டைப் பிரசாவுரிமை தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

1987 இன் 45 ஆம் இலக்க திருத்தச் சட்டம் மூலமாக இரட்டைப் பிரசாவுரிமை அளித்தல் ஆரம்பிக்கப்பட்டது.

குடிவருவோர்  - குடியகல்வோர் சட்டத்தின் பகுதி III இன் கீழ் வதியும் விருந்தினர் செயற்றிட்டத்தில் பதிவு செய்துள்ள ஆட்களைப் பிரசைகளாக பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் 1993 இன் 43 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டன. தொடக்கத்தில் பரம்பரை வழியாக பிரசாவுரிமை பெறுவதற்கான உரிமை தந்தைவழிப் பரம்பரைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2003 இல் 16 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் மூலமாக அது பிரசாவுரிமைச் சட்டத்தில் பணிக்கப்பட்ட தினத்தில் இருந்து (1948.11.15) தாய்வழிப் பரம்பரைக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

பிரசாவுரிமைப் பிரிவு

1948 இன் 18 ஆம் இலக்க பிரசாவுரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சில் நிறுவப்பட்டிருந்த பிரசாவுரிமைப் பிரிவு பின்னர் குடிவரவுத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டது. அதற்கமைய அத்திணைக்களத்தின் பணிகள் விஸ்தரிக்கப்பட்டன.

1949 இன் 03 ஆம் இலக்கமுடைய இந்திய - பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம்

பிரசாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு சில காலத்திற்குப் பின்னர் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வதிவாளர்கள் தொடர்பான வரைவுச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இது துரித தேவையாகக் கருதப்பட்டு 1949 இன் 3 ஆம் இலக்க இந்திய - பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு 1949 ஆகஸ்ட் 5 ஆம் திகதியில் இருந்து  (உரிய திகதி) 4* நடைமுறைப்படுத்தப்பட்டது. சட்டத்தின் 5 ஆம் பிரிவுக்கு அமைய  பதிவுசெய்வதற்கு தகுதி பெறும் ஆட்கள் உரிய திகதியிலிருந்து இரண்டு வருட காலப் பகுதிக்குள் பதவுக்காக விண்ணப்பித்தல் வேண்டும். பின்னர் அது மூன்று வருடங்களாக நீடிக்கப்பட்டது. 5* இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய வதிவாளர்களாகப் பதிவு செய்வதற்கான திணைக்களம் சட்டத்தின் ஏற்பாடுகளை அமுலாக்கும் பொருட்டு தாபிக்கப்பட்டு அதன் முதலாவது ஆணையாளராக திரு. வீ. எல். வீரசிங்க அவர் வகித்த பாராளுமன்ற தேர்தல்கள் ஆணையாளர் பதவிக்கு மேலதிகமாக நியமிக்கப்பட்டார். பின்னர் இத்திணைக்களம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இலங்கையருடன் கலக்க போலித்தனமற்ற விருப்பத்தை வெளிக்காட்டிய இலங்கையரல்லாத ஆட்கள் தொடர்பாக இலங்கை காட்டிய மனோபாவம் இச்சட்டத்தின் ஏற்பாடுகள் மூலமாக வெளிப்படுகின்றது. திருமணமாகாத அல்லது விவாகரத்து பெற்ற இந்திய அல்லது பாக்கிஸ்தானியருக்கு 1946 சனவரி 1 ஆம் திகதிக்கு உடன் முந்திய பத்து வருடங்கள் இடையறாத வதிவு இருந்திருப்பினும், திருமணமான ஆளெனில் இலங்கையில் ஐந்து வருட தொடர்ச்சியான வதிவு இருந்திருப்பினும், திருமணமானவரெனில் இலங்கையில் ஏழு வருட கால வதிவும் அன்றைய தினத்தில் இருந்து விண்ணப்பப் பத்திர திகதி வரை இலங்கையில் தொடர்ச்சியாக வதிவு இருந்திருப்பினும் அவர்களுக்கு பிரசையொருவராக பதிவு செய்துகொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்கக்கூடியதாக அமைந்ததோடு, அவர்களுக்கு சட்டபூர்வமான வாழ்வாதாரம் நிலவியதென ஆணையாளரைத் திருப்திப்படுத்த இயலுமாயின் அவ்விதமாக பதிவு செய்ய இயலுமானதாக இருந்தது.

நேரு கொத்தலாவல ஒப்பந்தம் 1954.

1949 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் உரிய திகதியிலிருந்து மூன்று வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 8 இன் பிரகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட திகதியில் (1950 ஜனவரி 26) இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்திய பிராசாவுரிமையைப் பெற்றுக்கொள்ள அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கமைய கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயங்களில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்குவதற்கு இந்த வரையறுக்கப்பட்ட வசதி போதுமானதாக இருக்கவில்லை. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான குறுகிய காலக்கெடு காரணமாக, 1949 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களுக்களை உரிய காலப் பகுதியில் சமர்ப்பிக்கத் தவறிய இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் தீர்வுக்காக மேலும் காத்திருக்க வேண்டியிருந்தது. இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்தியா அல்லது இலங்கையின் குடியுரிமை இல்லாமல் கணிசமானோர் இலங்கையில் தங்கியிருந்தனர்.

1954  ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது. இவர்கள் இலங்கையின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படும் வரை இந்தியக் குடிமக்களாகவே இருப்பார்கள் என்று இலங்கைப் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே, அவர்களில் எவரும் இலங்கைக் குடிகள் என்ற நிலைப்பாட்டை இலங்கை பிரதிநிதிகள் ஏற்கவில்லை. இந்தியப் பிரதிநிதிகள் வேறுவிதமான கருத்தைக் கொண்டிருந்தனர். மேற்குறிப்பிட்ட நபர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8 ஆவது பிரிவின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்தியக் கடவுச்சீட்டுகள் அல்லது அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8 வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்று இந்திய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இறுதியில், பிரதிநிதிகள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். 1949 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க இந்திய மற்றும் பாக்கிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இரண்டு வருடங்களுக்குள் நிறைவுசெய்ய இலங்கை பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர். இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விரும்பினால், இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்ய வசதி செய்து தருவதற்கு இந்தியப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர். அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல தலைமையில் இலங்கைக் குழுவும், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் இந்தியக் குழுவும் வழிநடாத்தப்பட்டன. இரு பிரதமர்களும் 1954 ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் நேரு கொத்தலாவல ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் இலங்கையில் தங்கியிருந்தனர் அல்லது இந்திய குடியுரிமை இல்லாமல் இருந்தனர். இது 1964 இல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் என பரவலாக அறியப்படும் மற்றொரு ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது.

1949 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க இந்திய மற்றும் பாக்கிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தின் விதிகளின் கீழ் 134,320 இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு இலங்கை குடியுரிமைச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டன. 1950 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க மற்றும் 1952 ஆம் ஆண்டு இல 45 ஆம் திருத்தச் சட்டங்கள் மூலம் இந்தச் சட்டம் இரண்டு முறை திருத்தப்பட்டது. இச்சட்டம் 1962  ஆம் ஆண்டில் காலாவதியானது.

சிரிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1967 இன் 14 ஆம் இலக்க இந்திய - இலங்கை உடன்படிக்கை (அமுலாக்கல்) சட்டம்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசித்து இந்நாட்டு மக்களுடன் கலந்தவர்களையும் உள்ளடக்கியதாக பிரித்தானிய ஆட்சியின் கீழ் சுதந்திரமாக இலங்கைக்குள்ளே பிரவேசித்த இந்தியர்களின் எண்ணிக்கை பல இலட்சமாக அமைந்தது. இத்தேசிய சிக்கலானது இடைக்கிடையே ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசாங்கத்தினதும் கவலைக்கு காரணமாக அமைந்தது. அதற்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் இந்திய அரசாங்கத்துடன் இடைக்கிடையே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியப் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரியுடன் இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க 1964 இல் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக இச்சிக்கலுக்கு வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த தீர்வுக்கு வர இயலுமாயிற்று. அதற்கிணங்க இயற்கை அதிகரிப்புடன் இலங்கையில் இருந்த நாடற்றவர்களின் எண்ணிக்கை 975,000 எனக் கணக்கிடப்பட்டது. இதில் 300,000 பேருக்கு இலங்கைப் பிரசாவுரிமையையும் 525,000 பேருக்கு இந்தியப் பிரசாவுரிமையையும் வழங்கவும் எஞ்சிய 150,000 பேரை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ள இருதரப்பினரும் உடன்பாட்டுக்கு வந்தனர். அதற்கமைய 1974 ஆம் ஆண்டில்இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாருக்கும் இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதற்கமைய இலங்கைக்கு ஏற்புடைய எண்ணிக்கை 375,000 ஆகும். இந்தியாவுக்கு ஏற்புடைய எண்ணிக்கை 600,000 ஆகும். அதற்கமைய 1967 இன் 14 ஆம் இலக்கமுடைய இந்திய - இலங்கை உடன்படிக்கை (அமுலாக்கல்) சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அச்சட்டத்தின் ஏற்பாடுகளை அமுலாக்கும் பொருட்டு இந்திய வம்சாவழியினரைப் பதிவு செய்தல் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. இது குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டது. குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் அவரது கடமைகளுக்கு மேலதிகமாக இந்திய வம்சாவழியினரைப் பதிவு செய்யும் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டார். 600,000 பேருக்கு இந்திய பிரசாவுரிமையை வழங்க இந்தியா இணங்கிய போதிலும் 506,000 பேர் மாத்திரமே இந்தியப் பிரசாவுரிமையைக் கோரினர். எனவே இலங்கை 1986  ஆண்டின் 05 ஆம் இலக்கமுடைய நாடற்றவர்களுக்குப் பிரசாவுரிமை வழங்கல் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலமாக எஞ்சிய 94,000 பேர்களுக்கு இலங்கைப் பிரசாவுரிமையை வழங்கும் பொறுப்பை ஏற்றது. அத்துடன் இந்ருநாடுகளிலும் பிரசாவுரிமையை வழங்க உடன்பட்ட ஆட்களின் எண்ணிக்கை இந்தியாவுக்கு 506,000 எனவும் இலங்கைக்கு 469,000 எனவும் திருத்தியமைக்கப்பட்டது. அதற்கமைய மேற்படி சட்டத்தின் கீழ் இலங்கைப் பிராஜாவுரிமையை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கை 1988 ஆம் ஆண்டளவில் 236,000 பேருக்கு பதிவின் மூலம் இந்த நாட்டுப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டது. (மேற்குறிப்பிட்ட 236,000 ஆட்களின் வழித்தோன்றல்கள் உட்பட 1988 ஆம் ஆண்டளவில் பிரஜாவுரிமை வழங்கப்பட்ட மொத்த ஆட்களின் எண்ணிக்கை 343985 ஆகும்.)

1988 இன் 39 ஆம் இலக்கமுடைய நாடற்றோருக்கு பிரசாவுரிமை வழங்கல் (சிறப்பேற்பாடுகள்) சட்டம்.

மேலே குறிப்பிட்ட 469,000 பேர்களிலிருந்து இயற்கையாக அதிகரித்த எண்ணிக்கையினரான 236,000 பேருக்கு 1988 இல் பிரசாவுரிமை வழங்கப்பட்டது. இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டிய அவசியம் தோன்றியது. ஆகவே எஞ்சிய 233,000 பேர்களுக்கும் அவர்களிலிருந்து இயற்கையாக அதிகரித்தவர்களுக்கும் பிரசாவுரிமையை வழங்குவதற்காக 1988 இன் 39 ஆம் இலக்கமுடைய நாடற்றோருக்கு பிரசாவுரிமை வழங்கல் (சிறப்பேற்பாடுகள்) சட்டம் கொண்டுவரப்பட்டது. 1964 இன் இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கைப் பிரசாவுரிமையைக் கோரிய போதிலும் 1988 வரை அதனைப் பெற இயலாமல் போன இந்திய வம்சாவளியினருக்கு இச்சட்டத்தின் தொடக்கத் திகதியில் (1988.11.11) இருந்து இலங்கைப் பிரசாவுரிமை வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், குடியுரிமை பெற்றவர்கள் குடியுரிமைச் சான்றிதழைப் பெறவேண்டிய கட்டாயமில்லை.சட்டத்தின் 4 ஆவது பிரிவின்படி ஒருவர் ஆணையரிடம் விண்ணப்பித்து குடியுரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறலாம். அதற்கிணங்க, 31-12-2017 நிலவரப்படி குடியுரிமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் 43,788 வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 1964 ஒக்டோபர் 30 இல் இருந்து இலங்கையில் நிரந்தர வதிவாளர்களாக இருந்த இந்திய வம்சாவளியினரும் தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இலங்கையைவிட்டுச் செல்ல நேர்ந்தவர்களும் தற்போது இந்தியாவில் வதிகின்றவர்களுமான ஆட்களுக்கு முதன்மைச் சட்டம் தொடங்கிய திகதியில் இருந்து இலங்கைப் பிரசை அந்தஸ்தினை வழங்க 2009 இன் 05 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை உரிமைகளை உறுதி செய்வதே இந்த திருத்தத்தின் நோக்கமாகும்.

2003 இன் 35 ஆம் இலக்கமுடைய இந்திய வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்குவதற்கான சட்டம்.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் அதற்குப் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இந்தியப் பிரஜாவுரிமை வழங்க்படவிருந்த மேலே குறிப்பிட்ட 506,000 பேர்களில் 342,000 பேர்களுக்கும் அவர்களிலிருந்து இயற்கையாக அதிகரித்தவர்களுக்கும் இந்திய பிரசாவுரிமையை வழங்கி 1992 வரை அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். (மேற்குறிப்பிட்ட ஆட்கள் 342000  பேரின் வழித்தோன்றல்கள் உள்ளிட்ட 1992.12.31 ஆம் திகதிக்கு மீண்டும் அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 425093 ஆகும்.)  6* எஞ்சிய 164,000 பேர்களும் அவர்களிலிருந்து இயற்கையாக அதிகரித்தவர்களும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனப் போராட்டம் காரணமாகத் தோன்றிய போக்குவரத்து வசதியீனம் மற்றும் தமிழ் நாட்டின் வீடமைப்புச் சிக்கல்கள் காரணமாக இந்தியாவுக்கு செல்ல இயலாத நிலை தோன்றியது. அவர்களில் ஒரு சிலருக்கு இந்திய பிரசாவுரிமை வழங்கப்படவில்லை. மேலும் சிலருக்கு பிரசாவுரிமை வழங்கப்பட்டு பயண ஆவணங்களும் விநியோகிக்கப்பட்டன. எனினும் அவர்களும் இலங்கையிலேயே தங்கி இருந்தனர். அவர்களுக்கு இலங்கைப் பிரசாவுரிமையை வழங்கும் பொருட்டு (2003 இன் 35 ஆம் இலக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் தொடங்கிய திகதியில் (2003.11.11) இருந்து அவர்களுக்கு இலங்கைப் பிரசைகள் அந்தஸ்து 1640000 பேருக்கு வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ்குடியுரிமை பெற்றவர்கள் குடியுரிமைச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமில்லை.சட்டத்தின் 4வது பிரிவின்படி ஒருவர் ஆணையரிடம் விண்ணப்பித்து குடியுரிமைச் சான்றிதழைப் பெறலாம். அதன்படி 31-12-2017 நிலவரப்படி 585 குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியாகும் போது இந்திய கடவுச்சீட்டு அல்லது அதற்கு இணையான ஆவணமொன்றைக் கொண்டுள்ள நிரந்தர வதிவாளருக்கு இலங்கைப் பிரசை அந்தஸ்து வழங்குதலானது இலங்கைப் பிரசாவுரிமையை சுய விருப்பின் பேரில் பெற்றுக்கொள்வதற்கான தனது எண்ணத்தைக் காட்டுகின்ற வெளிப்படுத்துகையை அட்டவணையில் குறிப்பிடப்பட்ட விசேட படிவத்தில் குறிப்பிட்டு, ஆணையாளருக்கு அதனைச் சமர்ப்பித்து ஆணையாளரால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டமையை எழுத்தில் அறிவித்தால் மாத்திரமே செல்லுபடியாகும். இச்சட்டத்தில் 'ஆணையாளர்' எனும் பதம் இந்திய வம்சாவளியினரைப் பதிவு செய்யும் ஆணையாளர் என்பதையே கருதுகின்றது.2017.12.31 ஆம் திகதிக்குஇந்திய கடவுச்சீட்டு அல்லது அதுபோன்ற ஆவணங்களை வைத்திருக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு ஆணையர் 73,933 அறிவிப்புக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

1964 ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து இந்திய வம்சாவளி நிலையுடன் இலங்கையில் நிரந்தர வதிவினைக் கொண்டிருந்து தனது கட்டுப்பாட்டுக்க அப்பாற்பட்ட காரணங்களினால் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு நேரிட்ட போது தற்போது இந்தியாவில் வதியும்  ஆட்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் இலங்கைப் பிரசாவுரிமையை முதன்மைச் சட்டம் நடைமுறைக்கு வந்த திகதியில் இருந்து இலங்கைப் பிரஜாவுரிமையை வழங்குவதற்காக, இச்சட்டம் 2009 இன் 06 ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் மூலமாக ஒரு தடவை திருத்தப்பட்டது. இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையை உறுதி செய்வதே இந்த திருத்தத்தின் நோக்கமாகும்.இச்சட்டம் நடைமுறைக்கு வந்தமையால் இலங்கையில் இருந்த இந்திய வம்சாவளியினர் தொடர்பாக நீண்ட காலம் நிலவிய சிக்கல் முழுமையாகத் தீர்க்கப்பட்டு முற்றுப் பெற்றது.

பிரசாவுரிமை தொடர்பான முந்திய சட்டங்களுடன் ஒப்பிடுகையில் 1988 இன் 39 ஆம் இலக்கச் சட்டத்தினதும் 2003 இன் 35 ஆம் இலக்கச் சட்டத்தினதும் தனித்துவமான வேறுபாடுகள்

  • முந்திய எல்லாச் சட்டங்களுக்கும் இணங்க பிரசாவுரிமையைப் பெற்றுக்கொள்ள எல்லா ஆட்களும் விண்ணப்பிக்க வேண்டியதாக இருந்ததோடு, சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மூலமாக அதனை வழங்க வேண்டி இருந்தது. இந்நிலைமை இவ்விரு சட்டங்களிலும் முற்றாக மாறுபட்ட நிலையில் காணப்பட்டது. முந்திய சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரசாவுரிமை பெற்றுக்கொள்ளாத, அதற்கான தகைமைகளைக் கொண்டிருந்த ஆட்கள் அனைவருக்கும் இலங்கைப் பிரசை அந்தஸ்து வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு எவ்வித முயற்சியும் இன்றி கிடைத்தமையால் விண்ணப்பிக்க வேண்டிய அவசியப்பாடு நிலவவில்லை.
     
  • மேலும் தனது பிரசாவுரிமையை நிரூபிக்க பிரசாவுரிமைச் சான்றிதழை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இரண்டு சட்டங்களிலும் 4 வது பிரிவின் கீழ் பிரசாவுரிமை நிலவுவதாக பார்த்த மாத்திரத்திலேயே காணப்படும் சான்றாக சத்தியப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டது.

2008 இன் 38 ஆம் இலக்கமுடைய சீன வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை வழங்கல்.

இந்திய வம்சாவளியினரது பிரசாவுரிமை பற்றிய பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர் கூட சீன வம்சாவளியினர் சிலர் நாடற்றவர்களாக இலங்கையில் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அல்லது அவர்களின் பெற்றோர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தவர்களாக விளங்கினர். எனவே அவர்களுக்கு 2008 ஒக்டோபர் 31 இல் இருந்து பதிவுசெய்தல் மூலமாக இலங்கைப் பிரசாவுரிமையை வழங்க இச்சட்டம் அத்தேதியில் இருந்து ஐந்து வருட காலத்திற்கு வலுவுள்ளதாக விளங்கும். அதற்கிணங்க 2013 ஒக்டோபர் 30 ஆம் திகதி அது நிறைவுறும். இச்சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரசாவுரிமையை பெற்றுக்கொள்ள உரிமையுடைய ஆளொருவர் விண்ணப்பப் பத்திரமொன்றை குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பத்திரம் பரிசீலிக்கப்பட்ட பின்னர் அது அங்கீகாரத்தின் பொருட்டு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அந்த அங்கீகாரம் கிடைத்த பின்னர், சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு விண்ணப்பதாரியால் உறுதியுரை அல்லது சத்தியவுரை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் அத்தேதியில் இருந்து அவர் இலங்கைப் பிரசையாக கருதப்படுவார். எவ்வாறாயினும், இந்த சட்டத்தின் செல்லுபடியாகும் காலம் தற்போது முடிவடைந்துள்ளதால் சீனா வம்சாவளியினரால் சமர்ப்பிக்கப்படும் இலங்கை குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சட்டத்தின் காலாவதி திகதி (2008.10.30) வரை, குழந்தைகள் உட்பட சீன வம்சாவளியைச் சேர்ந்த 94 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ள

இச்சட்டம் கொண்டுவரப்பட்டதும் இலங்கையில் நாடற்றோர் பற்றிய சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டு நிறைவுற்றது.

தகவல் மூலாதாரங்கள்

1* 1948 இல 20 எனும் குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் முதற் பக்கம்.

2*இலங்கை குடிப்பெயர்வு நடவடிக்கை கோவை 1958 பக்கம் 5.

3* குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் கட்டளைகள் இல 63, 1956.

4*1949 இல 3 எனும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வதிவாளர்களின் குடியுரிமைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவு.

5*1993 இலங்கை குடிப்பெயர்வு கட்டுப்பாட்டு நடவடிக்கை கோவை பக்க இல.45

6* 1992  வருடத்திற்கான குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் இந்திய மூலப்பிறப்புள்ள ஆட்களை பதிவுசெய்யும் ஆணையாளரின் அறிக்கை 11 ஆவது பின்னிணைப்பு.




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
23436570