குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



வெளிநாட்டில் பிறக்கும் பிள்ளைகளின் பிறப்புக்களைப் பதிவு செய்தல்

இது யாருக்கு ஏற்புடையதாகும்?

இலங்கைப் பெற்றோர்களுக்கு (குறைந்த பட்சம் பெற்றோரில் ஒருவரேனும் இலங்கையராக இருத்தல்) இலங்கைக்கு வெளியில் பிறந்த பிள்ளைகளுக்குப் பிள்ளைகளின் பிரசாவுரிமையை உறுதிப்படுத்துவதற்காக பிறப்பிலிருந்து குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்குள்ளேனும் இத்திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.

ஒரு வருடத்திற்குள் எனது பிள்ளையின் பிறப்பினைப் பதிவு செய்ய இயலாவிட்டால் என்ன நேரிடும் ?

பிறப்பு இடம் பெற்ற திகதியில் இருந்து ஒரு வருடத்திற்குள் பிறப்பினைப் பதிவு செய்யத் தவறினால் ஒரு வருடத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகை என மேலதிகக் கட்டணமொன்று அறவிடப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

  1. பிள்ளையின் பிறப்பு நிகழ்ந்த நாட்டில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் (பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி ஆங்கில மொழியில் இல்லாத  போது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பொன்றை இணைத்தல் வேண்டும்) 
  2. இலங்கை பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கொன்சியுலர் அலுவலக பிறப்புச் சான்றிதழ்.
  3. பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகள்.
  4. விண்ணப்பதாரி (தந்தை அல்லது தாய்) பதிவின் மூலம் இலங்கைப் பிரஜை எனின், ஏற்புடைய சான்றிதழ்.
  5. பெற்றோரின் விவாகச் சான்றிதழின் மூலப் பிரதி.
  6. பிள்ளையின் பிறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு வதிவை உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பயண ஆவணங்கள் மற்றும் வீசாக்களின் மூலப் பிரதிகள்.
  7. பெற்றோர் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பின் அவர்களது இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்கள்.

விண்ணப்பப்படிவங்களைப் பெறக்கூடிய இடங்கள்

  1. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், குடியுரிமைப் பிரிவு, 2ம் மாடி, "சுஹுறுபாய",  பத்தரமுல்லை.
  2. வதியும் நாட்டின் இலங்கைத் தூதரகம்
  3. விண்ணப்பப்படிவத்தின் அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்ள இந்த இடத்தை கிளிக் செய்யவும்

குடிவரவு  மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் குடியுரிமைப் பிரிவில் விண்ணப்பப்படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு விண்ணப்பதாரிக்கு அனுப்பிவைப்பதற்காக சான்றிதழ்கள் உரிய இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

விண்ணப்பப்படிவத்தை எவ்வாறு ஒப்படைக்க முடியும்?

  1. முறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை அவசியமான ஆவணங்களின் மூலப் பிரதிகள் மற்றும் நிழற்பிரதிகளுடன் கொழும்பிலுள்ள குடிவரவு  மற்றும் குடியகல்வுத் திணைக்கள தலைமை அலுவலகத்தின் குடியுரிமைப் பிரிவுக்கு ஒப்படைக்கவும்.
  2. பிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற நாட்டின் இலங்கைத் தூதரகத்தினூடாக முறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்களை அவசியமான ஆவணங்கள் மற்றும் அவற்றின் பிரதிகளுடன் சமர்ப்பிக்கலாம்.

குறிப்பு:

  • குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு வருட காலப் பகுதிக்குள் பிறப்பினைப் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் போது தாமதத்திற்காக  மேலதிகக் கட்டணமொன்று அறவிடப்படும்.
  • வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் போது தூதரகத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரொருவர் மூலமாக ஆவணங்கள் அனைத்தையும் அத்தாட்சிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதோடு அவ்வுத்தியோகத்தரின் கையொப்பமும் இறப்பர் முத்திரையும் அதில் இடப்படல் வேண்டும்.
பிரஜாவுரிமையைப் பதிவுசெய்தல் - கட்டணம்
இலங்கைக்கு வெளியில் பிறந்த பிள்ளையின் பிறப்பினை இலங்கை பிரஜையாக பதிவுசெய்தல்.      (இலங்கை) ரூபா
உரிய காலப் பகுதிக்குள் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்திற்காக (பிறப்பில் இருந்து ஒரு வருட காலப் பகுதிக்குள்)  5,750
தாமதித்த விண்ணப்பப்படிவமொன்றுக்காக ஒரு வருடத்திற்கு 500

கட்டணம் செலுத்தும் முறை

விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் போதே கட்டணம் செலுத்தப்படல் வேண்டும். பின்னர் விசாரிப்பதற்காக பற்றுச்சீட்டினை வைத்துக்கொள்ளல் வேண்டும்.

இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

விண்ணப்பதாரி குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில்,

  1. சான்றிதழை உரிய தூதரகத்தினூடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
  2. சான்றிதழை விண்ணப்பதாரியின் இலங்கை முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க முடியும்.
  3. விண்ணப்பதாரியின் பெற்றோர் மாத்திரம் குடிவரவு மற்றும்குடியகல்வுத் திணைக்களத்தின் குடியுரிமைப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
23438495